
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சம்பல் மாவட்டத்தில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. அதன்படி மணமகள் மேடையில் அமர்ந்து கொண்டிருந்த போது மணமகள் நடந்து வந்தார். அவர் குடிபோதையில் தள்ளாடியபடி நடந்து வருவதை மணமகள், அவருடைய குடும்பத்தினர் பார்த்த நிலையில் அதிர்ச்சி அடைந்தனர். மணமகன் குடிபோதையில் நடந்து வந்ததை பார்த்து அங்கிருந்தவர்கள் சிரித்ததால் மணமகள் மிகவும் கோபமடைந்தார்.
இந்நிலையில் மணமகள் மற்றும் அவரின் குடும்பத்தினர் உடனடியாக திருமணத்தை நிறுத்த முடிவு செய்தனர். இதனால் மணமகள் மற்றும் மணமகன் குடும்பத்தினருக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டது. இந்தப் பிரச்சினை பஞ்சாயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் மணமகனின் நண்பர்கள் குளிர்பானத்தில் மது கலந்து அவருக்கு கொடுத்ததாக அவரது குடும்பத்தினர் கூறினர். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாத மணமகள் தனது முடிவில் உறுதியாக இருந்து அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.
இதைத்தொடர்ந்து மணமகளின் குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளுக்காக செலவழிக்கப்பட்ட ரூ. 7 லட்சம் பணத்தை திரும்ப வழங்குமாறு மணமகன் குடும்பத்தினரிடம் கேட்டனர். அதற்கு மணமகனின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்த நிலையில் இந்த பிரச்சனை காவல் நிலையத்திற்கு சென்றது. அங்கு இரு தரப்பினருக்கும் இடையே நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையின் இறுதியில் பணத்தை திருப்பி கொடுப்பதாக மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.