சென்னை விமான நிலையத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பின்,  தங்கம் கடத்தலை தொடர்ந்து ஹெராயின் போன்ற போதை பவுடர், வனவிலங்குகள், வைரம் போன்ற கடத்தலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தியதில்,  கடந்த 2021-ஆம் ஆண்டை விட 2022-ஆம் ஆண்டில் தங்கம், போதைப்பொருள், வெளிநாட்டு பணம் போன்ற கடத்தல் பொருட்கள் அதிக அளவு பிடிபட்டுள்ளது.  அதன்படி ரூ.94.22 கோடி மதிப்புள்ள 205.84 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தங்கம் கடத்தல்கள் சம்பந்தமாக 293 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இந்த கடத்தலில் ஈடுபட்ட 97 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து இந்த கடத்தல் தங்கம் அதிகமாக துபாய், சார்ஜா, குவைத், சவுதி அரேபியா, இலங்கை , மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து கடத்தி வரப்படுகின்றன. இந்நிலையில் தங்கத்தை கடத்துவதற்காக நூதன முறையில் பெண்கள் தலை முடி கூந்தலுக்குள் மறைத்து வைத்தும்  அல்லது தங்கத்தை பவுடராக்கி குங்குமம் பொடிக்குள் மறைத்தும் கொண்டு வரும் சம்பவங்கள் பெரும் அளவில் நடந்துள்ளன.

இந்நிலையில் 124 கோடியே 88 லட்ச ரூபாய் மதிப்புள்ள  போதைப்பொருள், தங்கம்  ஆகியவை கடந்த 2022-ஆம் ஆண்டில் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  இது தொடர்பாக 407 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு  122 கடத்தல் காரர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர். அதிலும் பெண்களும் இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.