தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரைப் பறிகொடுத்த இந்திய கிரிக்கெட் அணி, நாடு முழுவதும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்தத் தொடரில் கேப்டனாகச் செயல்பட்ட ரிஷப் பண்ட்டும் இந்த விமர்சனங்களில் இருந்து தப்பவில்லை. இந்நிலையில், தொடர் தோல்வியுற்றதற்காக மன்னிப்புக் கோரி ரிஷப் பண்ட் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், “கடந்த இரண்டு வாரங்களாக நாங்கள் போதுமான அளவு கிரிக்கெட் விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வெட்கப்படுவதற்கில்லை. ஒரு அணியாகவும், தனிநபர்களாகவும், எப்போதும் உயர்ந்த மட்டத்தில் செயல்பட்டு, பில்லியன் கணக்கான இந்தியர்களின் முகங்களில் புன்னகையைக் கொண்டுவரவே விரும்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
— Rishabh Pant (@RishabhPant17) November 27, 2025
தொடர்ந்து தனது பதிவில், “இந்த முறை எங்களால் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை, அதற்காக மன்னிக்கவும்” என்று ரிஷப் பண்ட் உருக்கமாகக் கோரியுள்ளார். மேலும் அவர், “விளையாட்டு தனிநபர்களாகவும், குழுவாகவும் கற்றுக்கொள்ளவும், மாற்றியமைக்கவும், வளரவும் கற்றுக்கொடுக்கிறது. இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய மரியாதை.
இந்த அணியின் திறன் என்ன என்பதை நாங்கள் அறிவோம். எனவே, ஒரு அணியாகவும், தனிநபர்களாகவும் வலுவாகவும், சிறப்பாகவும் திரும்ப நாங்கள் கடினமாக உழைப்போம். மீண்டும் ஒன்றிணைவோம், கவனம் செலுத்துவோம், மீண்டும் நிலைநிறுத்துவோம்” என்று உறுதி அளித்துள்ளார். முடிவில், ரசிகர்கள் தொடர்ந்து காட்டும் ‘அசைக்க முடியாத ஆதரவு மற்றும் அன்புக்கு’ நன்றி தெரிவித்து அவர் தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.
