
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் மேக வர்ணம் என்பவர் மெகா ப்ளூ மெட்டல் என்ற கல்குவாரியை நடத்தி வருகிறார். இங்கு தினமும் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு வரும் நிலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பொக்லைன் எந்திரம் பாறைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென பெரிய பாறைகள் மேலே இருந்து இடிந்து விழ தொடங்கியது.
உடனே அப்பகுதியில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடிய போது சிலர் பாறைகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர். இந்த தகவல் உடனடியாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் உயிரிழந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆறுமுகம், முருகானந்தம், கணேசன் மற்றும் ஆண்டி சாமி ஆகியோர் பாறைகளின் அடியில் சிக்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இதை தொடர்ந்து பொக்லைன் இயந்திரத்தின் ஓட்டுனராக வேலை பார்த்து வந்த ஹர்ஷித் என்பவரின் உடல் நீண்ட நேரமாக தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்து ராட்சத பாறையின் அடியில் சிக்கியிருந்த ஹர்ஷித்தை மீட்டனர். ஏற்கனவே 4 பேர் மீட்கப்பட்ட நிலையில், தற்போது ஒடிசாவை சேர்ந்த ஹர்ஷித் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து தொடர்பாக கல்குவாரியின் உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.