டாஸ்மாக் நிர்வாகத்திற்கு அதிக வருவாய் ஈட்டி தந்ததை பாராட்டி குடியரசு தின விழாவில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியது சர்ச்சையானதால் கரூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு பணியாளர்களுக்கு குடியரசு தினத்தன்று மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அதில் ஒரு டாஸ்மாக் மேற்பார்வையாளருக்கு வழங்கிய பாராட்டு சான்றிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வருவாய் ஈட்டும் பணியை சிறப்பாக பணியாற்றியதை பாராட்டி மாவட்ட நிர்வாகம் இந்த நற்சான்றிதழை மகிழ்வுடன் வழங்குகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது விமர்சனங்களுக்கு ஆளான நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் விளக்கம் அளித்துள்ளார். டாஸ்மாக் ஊழியர்களுக்கு விருது வழங்கப்பட்டது சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விமர்சனங்கள் வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ள அவர், இதே போல் 2019 ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்ட பாராட்டு சான்றிதழை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ஆண்டுதோறும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு விருது வழங்குவது வழக்கமானது தான் என்று தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியர் வரும் காலங்களில் இது போன்ற நுட்பமான மற்றும் உணர்வுபூர்வமான விஷயங்கள் கவனமுடன் கையாளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் சட்டமன்றத் தேர்தல் வரும்போது எல்லாம் ஒவ்வொரு கட்சிகளும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அளிக்கப்படும் வாக்குறுதி நினைவு கூற தக்கது.