டெல்லியில் காற்று மாசு அபாயகரமான அளவில் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், உணவகங்களில் நிலக்கரி மற்றும் விறகுகளைப் பயன்படுத்தும் தந்தூரி அடுப்புகளுக்கு மாநில அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. இதன்படி, டெல்லி முழுவதும் உள்ள ஹோட்டல்கள், தாபாக்கள் மற்றும் தெருவோர உணவகங்களில் நிலக்கரி அல்லது விறகு மூலம் தந்தூரி தயாரிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், திறந்த வெளியில் எவ்விதமான எரிக்கும் செயல்களையும் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ள அரசு, இதற்கு மாற்றாக மின்சாரம் அல்லது எரிவாயு அடிப்படையிலான அடுப்புகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவை மீறும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகத்திற்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் தலைமைப் பொறியாளர்கள் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் தீவிர சோதனைகளை நடத்தி, உணவகங்கள் நிலக்கரி மற்றும் விறகு பயன்பாட்டை உடனடியாக நிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் விடுத்துள்ள வேண்டுகோளில், திறந்த வெளியில் குப்பைகளை எரிக்க வேண்டாம் என்றும், மக்களின் சிறிய ஒத்துழைப்பு காற்று மாசைக் குறைப்பதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இந்தத் தடையை உடனடியாக அமல்படுத்த தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதால், டெல்லி உணவக உரிமையாளர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
