ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில்  கழுகுகள் குறித்த கணக்கெடுப்பு நடை பெறும். ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு காலங்களில் இந்த கணக்கெடுப்பு நடைபெறுவதால், இது பற்றி தோராயமான மதிப்பீடுகள் மட்டுமே கூறப்படுகிறது. அந்த வகையில் கழுகுகளின் எண்ணிக்கையானது, 3 மாநிலங்களில் குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் 3 மாநிலங்களையும் முதன்முறையாக ஒருங்கிணைந்த முறையில், இந்த கணக்கெடுப்பானது நாளை (சனிக்கிழமை) தொடங்கப்படுகிறது. மேலும் நாளை தொடங்கும் இந்த கணக்கெடுப்பு முறை 2 நாட்கள் நடைபெறும் எனவும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் முதல் முறையாக ஒருங்கிணைக்கப்பட்ட கணக்கெடுப்பானது நடத்தப்படும் என முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாவது, இதுவரை நடைபெற்ற கணக்கெடுப்புகளில் 200-க்கும் குறைவான கழுகுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் நாளை நடைபெறும் கணக்கெடுப்பின் மூலம் கழுகுகளின் எண்ணிக்கை மற்றும் வாழ்விடத்தையும் துல்லியமாக மதிப்பிட உதவும். இதனையடுத்து தமிழகத்தின் நீலகிரி மற்றும் ஈரோட்டில் மட்டும் கணக்கெடுப்பு நடைபெறுவதாகவும், முதுமலையில் 35 இடங்களில் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் கூறினார்கள்.