திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் பேசியத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக-வைக் கடுமையாக விமர்சித்தார்.
அவர், “அதிமுக என்பது என்ஜின் இல்லாத கார் என்றும், அந்தக் காரை பாஜக என்ற லாரி கட்டி இழுக்கிறது” என்றும் விமர்சித்தார். “பாசிசத்திற்குத் தமிழ்நாட்டில் எப்போதும் இடமில்லை” என்றும் அவர் உறுதியாகக் கூறினார். மேலும், பாசிசத்திற்கு எதிராகப் போராடத் திமுக இளைஞரணி என்றும் தயாராக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மத்திய அமைச்சர் அமித் ஷாவின் இலக்கு தமிழ்நாடாக இருக்கலாம் என்று குறிப்பிட்ட உதயநிதி, “மதம் பிடித்த யானை பாஜக” என்றும், அதை அடக்கும் அங்குசம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் இருப்பதாகவும் கூறினார்.
சட்டம்-ஒழுங்கைப் பற்றிப் பேசும் பழனிசாமி, முதலில் அதிமுகவைக் காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் சாடினார். “தமிழ்நாடு என்றும் தில்லியின் கட்டுப்பாட்டில் இருந்து ‘அவுட் ஆஃப் கன்ட்ரோல்தான்'” என்று குறிப்பிட்ட அவர், “மிசா நெருப்பாற்றில் நீந்திய திமுகவை நீக்கிவிட்டு, குஜராத்தில் இருந்து தமிழகத்தைக் கட்டுப்படுத்த முடியாது” என்றும் முழங்கினார்.
