நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கலந்து கொண்டு உரையாற்றினார்.அப்போது அவர் பேசுகையில், “அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைய பலர் தயாராகி வருகின்றனர். தேர்தல் களம் என்பது எப்படி அமையும் என்பதை யாராலும் முன்கூட்டியே கணிக்க முடியாது. அதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தவெகவிற்கு போட்டி என்று யாரையும் குறிப்பிட முடியாது. நம்மிடம் மக்கள் சக்தி உள்ளது. தனிப்பட்ட முறையில் யாரையும் போட்டியாளராகக் கருதவில்லை” என்றார்.

தொடர்ந்து அவர், “நான் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருக்கிறேன். மக்கள் ஆதரவின் பேரில் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பார். தமிழகத்திற்கு நல்லாட்சியை வழங்க விஜய்யைத் தவிர வேறு யாரும் இல்லை. இளைஞர்களை எழுச்சியடையச் செய்யும் ஆற்றல் விஜய்க்கு மட்டுமே உள்ளது. பெண்கள் பாதுகாப்பு விவகாரத்திலும் இன்று விஜய்யை விட சிறந்த தலைவரை காண முடியாது” எனக் கூறினார். மேலும், “2026 மே மாதத்தில் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்கும் வரலாற்றை நாம் உருவாக்க வேண்டும். தவெக தலைவர் விஜயே முதலமைச்சர் வேட்பாளர் என்பதை ஏற்றுக் கொள்பவர்களே கூட்டணியில் இணைய முடியும். இதுவே நமது லட்சியப் பயணம். வெற்றிவாகை சூட அனைவரும் தயாராக இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.