தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் சென்னையில் நேற்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவொளி, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முதன்மை கல்வி அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுப்பதோடு, கழிவறை மற்றும் குடிநீர் வசதிகளை மேம்படுத்த வேண்டும். அதன் பிறகு எமிஸ் இணையதள பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். அதன் பிறகு பழைய காகித கோப்பைகளை டிஜிட்டல் முறையில் மாற்றுவதோடு நவீன முறையில் லேப்டாப் மற்றும் கணினிகளை பயன்படுத்த வேண்டும். இதற்கு தேவையான பயிற்சிகளை அளிக்க அரசு தயாராக இருக்கிறது. இதை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் இதன் மூலம் அடுத்த கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் டிஜிட்டல் முறையில் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.