ஓர் ஊழியர் தன் தாத்தா இறந்ததையடுத்து விடுப்பு (Leave) கேட்டபோது, அதற்கு அவரது மேலாளர் அளித்த மனிதாபிமானமற்ற வாட்ஸ்அப் பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, நச்சுத்தன்மை வாய்ந்த பணிச்சூழல் குறித்துக் கடுமையான கண்டனங்களைத் தூண்டியுள்ளது.
அந்த ஊழியர் தனது தாத்தாவின் மறைவு குறித்துத் தகவல் தெரிவித்தபோது, மேலாளர் அனுதாபம் தெரிவித்தாலும், “விடுப்பு எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், இன்று சில வாடிக்கையாளர்கள் நிறுவனத்துடன் இணைகிறார்கள். நீங்கள் அந்த இன்டக்ஷன் அழைப்பில் இருக்க முடியுமா? வாட்ஸ்அப்பில் ஆக்டிவாக இருங்கள், தேவைப்படும்போது டிசைனர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள்” என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இரண்டு ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அந்த ஊழியர், “போதிய நிதி இல்லை” என்று பலரை வேலையை விட்டு நீக்கிய பின்னர், தனது பணிப்பளு எல்லைகளைத் தாண்டியும் வேலை செய்ததாகவும், ஆனாலும் எப்போதுமே புகார் அளித்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால், தனிப்பட்ட அவசரகால சூழ்நிலைகளிலும் ஊழியர்கள் தொடர்ந்து கிடைக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் மேலாளரின் இந்தப் பதில் அபத்தமானது என்று அவர் கண்டித்துள்ளார்.
“என் வேலையைக் கவனிக்க வேறு யாருமில்லை என்பது என் பிரச்னையா? மேலாளர்கள், நாங்கள் வெறும் முடிவுகளை மட்டும் வழங்கும் இயந்திரங்கள் அல்ல, நாங்களும் மனிதர்கள் என்பதை மறந்துவிட்டார்களா?” என்று அவர் தனது ரெட்டிட் (Reddit) பதிவில் குமுறிக் கேள்வியெழுப்பியுள்ளார்.
