டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் அணி சந்தித்த படுதோல்வி, அந்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வியின் தேவையற்ற ஆக்ரோஷப் பேச்சுகள் ராணுவத் தலைமைக்கும் அரசுக்கும் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

போட்டிக்கு முன்னதாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் எச்சரிக்கைகள் குறித்துப் பேசிய நக்வி, தானோ அல்லது பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீரோ யாருக்கும் அஞ்சமாட்டோம் என்று வீராவேசமாக முழங்கியிருந்தார். ஆனால், களத்தில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, நக்வியின் இந்தப் பேச்சுக்கள் இப்போது அந்நாட்டிற்குப் பெரும் அவமானத்தைத் தேடித் தந்துள்ளன.

பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர், கிரிக்கெட் விவகாரத்தில் தனது பெயரைத் தேவையற்ற முறையில் இழுத்துவிட்டதற்காக நக்வி மீது கடும் கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ராணுவத்தின் ஒப்புதல் பெறாமல் இத்தகைய அரசியல் பேச்சுகளை நக்வி பேசியது ராணுவத் தலைமையைப் பெரிதும் அதிருப்தி அடையச் செய்துள்ளது.

நக்வி தனது வரம்பைத் தாண்டி செயல்பட்டதாகக் கருதும் முனீர், தனது கண்டனத்தைப் பிரதமரின் ராணுவச் செயலாளர் மூலம் ஷாபாஸ் ஷெரீப் அரசுக்குத் தெரிவித்துள்ளார். ஒரு விளையாட்டை ராணுவப் பெருமையுடன் ஒப்பிட்டுப் பேசிய பிறகு ஏற்பட்ட இந்தத் தோல்வி, ராணுவத்தின் பிம்பத்தைச் சிதைப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.

நேற்று கொழும்புவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 175 ரன்கள் குவிக்க, 176 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் வெறும் 114 ரன்களுக்குச் சுருண்டது.

ஆட்டத்திற்கு முன்னதாக இந்தியாவுடன் விளையாட மறுத்து, பின்னர் பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, ஆட்டத்திலும் தோற்று அரசியலிலும் சிக்கித் தவிப்பது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகச் சீர்கேடே இந்த நிலைக்குக் காரணம் என்று ராணுவத் தலைமை குற்றம் சாட்டியுள்ளது.