இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து மன்னர் கிங் சார்லஸை லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் சந்தித்து உரையாடியது. இந்தச் சந்திப்பின் போது பாகிஸ்தான் டெஸ்ட் அணித் தலைவர் பாபர் அசாம், ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியின் வீரர்களும் கையெழுத்திட்ட கிரிக்கெட் மட்டையை கிங் சார்லஸுக்குப் பரிசாக வழங்கினார்.

இந்தச் சந்திப்பின் போது மட்டையைப் பார்வையிட்ட கிங் சார்லஸ், “இது பாகிஸ்தான் வில்லோ மரத்தால் செய்யப்பட்டதா?”  என்று சுவாரஸ்யமாகக் கேள்வி எழுப்பினார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் அணி 0-2 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை இழந்திருக்கும் சூழலில், மைதானத்திற்கு வெளியே நடந்த இந்தச் சந்திப்பும், பாபர் அசாமுடன் மன்னரின் கலகலப்பான உரையாடலும் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் வைரலானது.

இதற்கிடையே, ஐஸ்லாந்து கிரிக்கெட் நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு பாகிஸ்தான் அணியை மரண ட்ரோல் செய்து பதிவிட்டுள்ளது. கிங் சார்லஸ் அந்த மட்டையில் இருந்த வீரர்களின் கையெழுத்துகளைப் பார்த்தாலும், அதில் உள்ள பல வீரர்களை அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று கிண்டலடித்த ஐஸ்லாந்து கிரிக்கெட், “ஏனென்றால், வேறு யாருக்கும் அவர்களைத் தெரியாது”  என்று கடுமையான கலாய்ப்புடன் பதிவிட்டது இணையத்தில் வைரலாகி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.