இந்திய அணியின் நட்சத்திர வீரரும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வெற்றிகரமான கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆகியோருக்கு இடையேயான நட்பு கிரிக்கெட் உலகறிந்தது. கேப்டன் கூலைத் தன் ஆதர்ச நாயகனாகக் கருதும் ரிஷப் பந்த், அணிக்கு வெளியே இருக்கும் காலங்களில் பலமுறை தோனியின் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டுள்ளார். அந்த வகையில் தற்போது ரிஷப் பந்த் மற்றும் தோனி லண்டனில் நண்பர்களுடன் பார்ட்டி செய்யும் ஒரு பழைய வீடியோ சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் அந்த வீடியோவில், ரிஷப் பந்த் ஒரு ஹோட்டல் அறையில் நண்பர்களுடன் சோபாவில் அமர்ந்திருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அவருக்குப் பின்புறம் தோனி நிற்பதும், புகைப்படத்திற்குப் பிறகு ரிஷப் பந்துடன் கைகுலுக்குவதும் பதிவாகியுள்ளது. குறிப்பாக, அந்த வீடியோவில் தோனி கொஞ்சம் புகைபிடித்துவிட்டு வருகிறேன்  என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்வது போன்ற வார்த்தைகள் கேட்பதாகக் கூறப்படுகிறது. எனினும், இந்த வீடியோ எப்போதையது என்பதோ அல்லது இதன் உண்மைத் தன்மையோ முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை.

 

இந்த வீடியோ கிளிப்பில் மேஜையில் பீர் கேன்கள் மற்றும் காக்டெய்ல் பானங்கள் வைக்கப்பட்டிருப்பதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, இதில் ‘புகையிலை’ பற்றிய குறிப்பு வந்திருப்பது ஆன்லைன் விவாதங்களின் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

முன்னதாக, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஜார்ஜ் பெய்லி அளித்த பேட்டி ஒன்றில், “எனக்கு ஷீஷா அல்லது ஹூக்கா புகைக்கப் பிடிக்கும். அதனால் நான் பெரும்பாலும் தோனியின் அறைக்குச் செல்வேன். அங்கு யாருக்கும் தடை இருக்காது. நீங்கள் உள்ளே சென்றால், பல இளம் வீரர்களை அங்கே பார்க்கலாம்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் மைக்கல் ஹசியும், தோனியின் ஹோட்டல் அறை ஒரு முறைசாரா டீம் லவுஞ்ச் போலச் செயல்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பு ரிஷப் பந்தும் தோனியும் ராஞ்சியில் இணைந்து பயிற்சி பெற்றதும், அதன் பிறகு லண்டனில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது இருவரும் ஒன்றாகக் களம் கண்டதும் நினைவுகூரத்தக்கது. இலங்கை தொடரில் மூன்று இன்னிங்ஸ்களில் 168 ரன்கள் குவித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்சர்களை அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.