துபாயில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் கேரளாவைச் சேர்ந்த 16 வயது மாணவர் ரைலன் அணில், நீட் மறுதேர்வு இணையதளம் மற்றும் ஜேஇஇ அட்வான்ஸ்டு இணையதளத்தில் இருந்த பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து சுட்டிக்காட்டியுள்ளார். இணையதளங்களை சேதப்படுத்தும் நோக்கில் செயல்படாமல், அவற்றில் இருந்த பாதுகாப்பு குறைபாடுகளை ஆய்வு செய்து தொடர்புடையவர்களுக்கு தெரியப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவயது முதலே இணையப் பாதுகாப்பு மற்றும் கணினித் துறையில் ஆர்வம் கொண்டிருந்த அணில், 8-ஆம் வகுப்பு முதலே இது தொடர்பான விஷயங்களை கற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளார். 10-ஆம் வகுப்பில் ஒரு தொடக்க நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்த குறைபாட்டையும் கண்டறிந்து தகவல் அளித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் நீட் மறுதேர்வு இணையதளத்தில் தேர்வு மையங்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் தொடர்பான பாதுகாக்கப்பட்ட தகவல்களை அணுகக்கூடிய குறைபாடு இருப்பதை அவர் கண்டறிந்ததாக கூறப்படுகிறது.

அதேபோல், ஐஐடி ரூர்க்கி நிர்வகிக்கும் ஜேஇஇ அட்வான்ஸ்டு இணையதளத்துடன் தொடர்புடைய இணையச் சேமிப்பகத்திலும் பாதுகாப்பு குறைபாடுகளை அவர் கண்டறிந்துள்ளார். அங்கு தேர்வர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் தேர்வு முடிவுகள் உள்ளிட்ட ஆவணங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் தெரிவித்த நிலையில், பின்னர் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டதாக அணில் கூறியுள்ளார்.

இந்நிலையில், அணிலின் திறமையை அறிந்த ஐஐடி கான்பூர், அவரை தனது இணையப் பாதுகாப்பு புத்தாக்க மையத்தில் இளநிலை இணையப் பாதுகாப்பு பொறியாளராக பணியமர்த்தியுள்ளது. தற்போது 12-ஆம் வகுப்பு படித்து வருவதால் துபாயில் இருந்தபடியே தொலைதூர ஆலோசகராக பணியாற்ற உள்ளார். இணையதளங்களின் பாதுகாப்பு ஆய்வு, கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் மட்டுமே அவர் ஈடுபடுவார் என்றும், ஐஐடியில் பணியமர்த்தப்பட்டவர்களில் மிகக் குறைந்த வயதுடையவராக இவர் இருப்பதாகவும் ஐஐடி கான்பூர் இயக்குநர் தெரிவித்துள்ளார்.