கொழும்புவில் நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ஐம்பதாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து இருநூற்று பன்னிரண்டு ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

அந்த அணியின் தொடக்க வீரர் பர்ஹான் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். அவருக்குப் பக்கபலமாக விளையாடிய பகர் சமான் எண்பத்து நான்கு ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடினமான இலக்கை நோக்கித் தொடர்ந்து ஆடிய இலங்கை அணி இறுதிவரை போராடி இருநூற்று ஏழு ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா பர்ஹான் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இந்தத் தொடரில் ஏழு போட்டிகளில் விளையாடி இரண்டு சதம் மற்றும் இரண்டு அரைசதங்களுடன் மொத்தம் முந்நூற்று எண்பத்து மூன்று ரன்கள் குவித்துள்ள அவர் உலகக் கோப்பை தொடர் ஒன்றில் அதிக ரன்கள் எடுத்த விராட் கோலியின் சாதனையை முறியடித்து முதலிடத்தைப் பிடித்துள்ளார்.