பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தில் லங்கூரியா மலை நீர்வீழ்ச்சி சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது. அந்த நீர்வீழ்ச்சியில் சம்பவ நாளன்று சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென மலையில் இருந்து நீரின் வரத்து அதிகமாகி நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஏற்பட்டது. அதனால் பயந்து போன சுற்றுலாப் பயணிகள் பதறி அடித்து ஓடிள்ளனர். இருப்பினும் 6 பெண்கள் ஆக்ரோஷமான வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனே பாறைகளில் நின்று கொண்டு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்களை பிடித்து இழுத்து காப்பாற்றி உள்ளனர்.

மேலும் வேகமாக அடித்து சொல்லப்பட்ட 2 பெண்களை பள்ளத்தாக்குகளில் இறங்கி அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு மீட்டனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அச்சம்பவத்தில் சிக்கிய பெண் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதே போன்று லங்குரியா நீர்வீழ்ச்சியில் இதுவரை இவ்வளவு அதிகமாக வெள்ளம் ஏற்பட்டது இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கிராம மக்களின் துணிச்சலான செயலை சமூக வலைதள பயனர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.