தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முக்கிய வழித்தடங்களிலும் ரயிலின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது முக்கிய வழித்தடங்களில் 110 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் நிலையில், அதன் வேகத்தை 130 முதல் 160 கிலோமீட்டர் வரை உயர்த்துவதற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி குரூப் ஏ மற்றும் குரூப் பி என இரு பிரிவுகளை ரயில்வே நிர்வாகம் உருவாக்கியுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் 160 கிலோமீட்டர் வேகத்திலும், குரூப் பி பிரிவில் 130 கிலோ மீட்டர் வேகத்திலும் ரயில்கள் இயக்கப்படும்.

இந்நிலையில் சென்னை- ரேணிகுண்டா, அரக்கோணம்- ஜோலார்பேட்டை ஆகிய 2 வழித்தடங்களில் ரயிலின் வேகத்தை 130 கிலோமீட்டர் வரை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபோக 5 வழித்தடங்களில் ரயிலில் வேகத்தை 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம். மேலும் திருநெல்வேலி- தென்காசி மார்க்கத்தில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கான சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது. தென் மாவட்டங்களில் கடந்த 3 வருடங்களாக இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அந்த பணிகள் முடிவடைந்துள்ளதால் அங்கும் ரயிலின் வேகம் அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.