சென்னை பெருங்குடியில் வசித்து வந்த லண்டனைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான மணிகண்டன் என்பவர் தன்னுடைய மனைவி தாரக பிரியா, மகன் தாரன், மற்றொரு மகனான ஒன்றரை வயது தாகன் ஆகியோரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட பண இழப்பால் மணிகண்டன் தன்னுடைய குடும்பத்தை கொலை செய்துவிட்டு அவரும் கடந்த வருடம் ஜனவரி மாதம் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மும்பையை சேர்ந்த கேம்ஸ் நிறுவனத்திற்கு மணிகண்டன் தற்கொலை விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இதேப்போன்று சென்னையை சேர்ந்த ரகுவரன் என்பவரது மரணம் தொடர்பாகவும் சிபிசிஐடி போலீசார் கேம்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த இரு நோட்டீசையும் ரத்து செய்வதோடு வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என கேம்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் காவல்துறை கேட்ட விளக்கங்களை நாங்கள் கொடுத்துவிட்டோம். நாங்கள் யாரையும் ரம்மி விளையாட்டில் பணம் வைத்து விளையாடுங்கள் என்று கூறவில்லை. அதேபோன்று வெற்றி தோல்வியையும் நாங்கள் தீர்மானிப்பது கிடையாது. ஆன்லைன் ரம்மியை தடை செய்ய முடியாததால் விசாரணை என்கிற பெயரில் எங்களை போலீசார் துன்புறுத்துகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதோடு கடந்த 2017-ம் ஆண்டுக்கு பிறகு மணிகண்டன் தங்களுடைய தளத்தில் விளையாடவில்லை எனவும், 5 வருடங்களுக்கு பிறகு தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் எனவும் கேம்ஸ் நிறுவனம் கூறியது. இந்த வழக்கு நீதிபதி ஜி. சந்திரசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரித்த நீதிபதி விசாரணைக்காக மட்டுமே சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் தற்போதைக்கு இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது என்று கூறினார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு, டிஜிபி சைலேந்திரபாபு சிபிசிஐடி போலீசார் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.