தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் “பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்ற தலைப்பில் நேற்று விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கி துவங்கி வைத்துள்ளார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன், மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து கலெக்டர் சாந்தி கூறியதாவது, தர்மபுரி மாவட்டத்தில் மாநில சராசரியை விட பாலின விகிதம் குறைவாகவும், உயர் வரிசை பிறப்பு மற்றும் இளம் வயது திருமணம் அதிகமாகவும் இருக்கிறது.

பெண் குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டும், பல்வேறு சமூக காரணங்களால் இளம் வயது திருமணம் நடைபெறுகிறது. இந்நிலையில் பொதுமக்கள் தங்களது கிராமங்களில் 18 வயது பூர்த்தியடையாத பெண்களுக்கு திருமண ஏற்பாடு நடைபெற்றால் 1098 என்றால் இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும். கருவில் பாலினம் கண்டறிந்து பெண் குழந்தை என தெரியும் பட்சத்தில் கருகலைப்பு செய்வதை கண்டறிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே கருவில் பாலினம் கண்டறிதல் மற்றும் பெண் சிசுக்கொலையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.