
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் கவுதமி பிரவீன்(15) என்ற மாணவி வசித்து வந்துள்ளார். இவர் காஞ்சிரப்பள்ளியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மாணவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது அவர் “குய்லின் பார் சிண்ட்ரோம்” என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த ஒன்றரை மாதமாக வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நோய் உடலில் உள்ள எதிர்ப்பு சக்திகளை பலவீனப்படுத்தி, நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தி தசை பலவீனத்தை ஏற்படுத்தும். கூச்ச உணர்வு, உடல் பலவீனம், உடலை முடக்குதல் உள்ளிட்டவைகள் இதன் அறிகுறியாகும். இது குறித்து மருத்துவத்துறையில் உள்ள கூடுதல் பேராசிரியரான பெண் மருத்துவர் கூறியதாவது, நீண்டகால சிகிச்சை பெறுவதன் மூலம் இந்த நோயை குணப்படுத்த முடியும். ஆனால் சிலர் உயிருக்கே ஆபத்தாக முடியும். இந்த நோய் எந்த வயதினரையும் எளிதில் பாதிக்கும். ஆனால் தொற்று நோய் கிடையாது என்று தெரிவித்தார்.