மும்பையில் உள்ள ஸ்காலர்ஸ் எஜுகேர் பள்ளியில் மொபைல் போன் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட ஒரு நாடகம் சமூக வலைதளங்களில் வைரலாகி, சர்ச்சையை கிளப்பியுள்ளது. குழந்தைகளிடையே மொபைல் போன் அடிமையாதலை கட்டுப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி, பயம் கலந்த அணுகுமுறையை பயன்படுத்தியதற்காக இணையவாசிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
பள்ளியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ, “தொழில்நுட்பத்தை சமநிலைப்படுத்தி, உண்மையான வாழ்க்கை உறவுகளை மேம்படுத்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
View this post on Instagram
வீடியோவில், மூன்று ஆசிரியர்கள் நாடகமாக நடிக்கின்றனர். ஒருவர் மொபைல் போனில் தொடர்ந்து உலாவுவதால் உணவை புறக்கணிக்கும் குழந்தையாகவும், மற்றொருவர் பெற்றோராகவும், மூன்றாவது ஆசிரியர் மருத்துவராகவும் நடிக்கின்றனர். நாடகத்தில், மொபைல் எடுக்கப்பட்டதால் குழந்தை எரிச்சலடைவதும், அதிக மொபைல் பயன்பாட்டால் கண்களில் வலி ஏற்படுவதும், மருத்துவர் பரிசோதனை செய்து ஊசி போடுவதும், கண்களில் இருந்து செயற்கையாக இரத்தம் வடிவதும், இறுதியில் பார்வை இழப்பு ஏற்படுவதாகவும் காட்டப்படுகிறது.
இந்த தீவிரமான நாடகத்தால் மாணவர்கள் உணர்ச்சிவசப்பட்டு, பலர் அழுதனர். ஆசிரியர்கள் “இனி மொபைல் வேண்டாம்” என்று கேட்டபோது, மாணவர்களின் உணர்ச்சிகரமான பதில்கள் வீடியோவில் பதிவாகியுள்ளன. இணையவாசிகள், “மிகவும் நல்ல முயற்சி,” “புதிய தலைமுறைக்கு புதிய தீர்வுகள் தேவை,” என்று பாராட்டினாலும், பயம் கலந்த இந்த அணுகுமுறை குழந்தைகளுக்கு ஏற்றதல்ல என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன.
