திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் அருகே வடபாதி மங்கலத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டிருந்த சுற்றுச்சூழல் கடந்த கஜா புயலின் போது சேதமடைந்தது. இதனையடுத்து சுற்றுச்சூழல் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால் சேதமடைந்த சுற்றுசுவர் வழியாக  சமூக விரோதிகள் புகுந்து மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவங்கள் பள்ளி செயல்பட்டு கொண்டிருக்கும் போதே நடைபெறுவதாகவும், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்தில் புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மர்ம நபர்கள் பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு கல் வீசி உள்ளனர். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக பள்ளி வளாகத்திற்கு சென்றனர். இதனை அறிந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அப்போது பள்ளி வளாகத்தில் ஏராளமான கற்கள் மற்றும் மது பாட்டில்கள், பிரியாணி போன்றவை சிதறி கிடந்தது. மேலும் அதிக அளவில் ரத்தக்கறை காணப்பட்டது. இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தில் நடந்தது என்ன? ஒரு தனிநபரை மர்ம  நபர்கள் தாக்கினார்களா? அல்லது குடிபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டார்களா? என பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.