ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பை அடுத்து வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வு வாதங்களை கேட்ட பிறகு உடனடியாக தீர்ப்பளித்தது.

மேலும் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பாக கையாண்டதாக உச்ச நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது. ஸ்டெர்லைட் வழக்கை சென்னை ஹைகோர்ட் விசாரித்ததில் வரம்பு மீறல் இருந்ததாக கருதவில்லை. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் சென்னை உயர்நீதிமன்றத்தின் முடிவில் தலையிட அவசியம் இல்லை, ஸ்டெர்லைட் ஆலை விதிமுறைகளை மீறி செயல்பட்டதன் அடிப்படையில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. வேதாந்தா தரப்பு, தமிழக அரசு தரப்பு, சுற்றுச்சூழல் ஆர்வலர் தரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில்  ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான #Sterlite ஆலைக்கு எதிராக நமது அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய மக்களுக்கும், நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது! எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களைக் காப்போம்!” என தெரிவித்துள்ளார்..