தேசியக் கல்விக் கொள்கை 2020-க்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு அதை ஏற்க முடியாது என தீர்மானமும் நிறைவேற்றியது. அதன் பிறகு மாநில கல்விக் கொள்கை குழு அமைக்கப்பட்டது. இந்த மாநிலக் கல்விக் கொள்கை குழுவிலிருந்து பேராசிரியர் ஜவகர்நேசன் விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். இதற்கு தற்போது அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி கடும் கண்டனங்களை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தேசியக் கல்விக் கொள்கையை பின்பற்றி மாநில கல்விக் கொள்கையை வகுக்க வேண்டும் என பேராசிரியர் ஜவகர் நேசனுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உயிர்மட்ட அதிகாரிகள் அனைத்து விதிமுறைகளையும் மீறி செயல்பட்டதாக வந்த தகவல் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இது தமிழக மக்களுக்கு செய்யும் அப்பட்டமான துரோகம். இது போன்ற சம்பவங்களை உயர்நிலை கமிட்டியின் தலைவர் மௌனமாக வேடிக்கை பார்ப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேராசிரியர் ஜவகர்நேசன் மாநில கல்வி கொள்கை குழுவிலிருந்து விலகியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் உடனடியாக தமிழக முதலமைச்சர் தலையிட்டு ஜவகர் நேசன் போன்ற நேர்மையான கல்வியாளர்கள் கொண்ட புதிய மாநில கல்வி கமிட்டியை உருவாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.