ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி அருகே பெருநாழி சண்முகபுரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் ரஞ்சித்-சரண்யா தம்பதியினருக்கு கஜன் (4) என்ற ஒரு மகன் இருக்கிறார். இந்த சிறுவனுக்கு இதயத்தில் துளை மற்றும் இதயத்திற்கு வந்து செல்லும் ரத்த குழாயில் பிரச்சனை இருக்கிறது. சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் 5 வயதுக்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். சிறுவனின் பெற்றோர் இதயத்துளை அடைப்பு அறுவை சிகிச்சைக்கு மொத்த பணத்தையும் செலவு செய்து விட்டனர். முழுமையான அறுவை சிகிச்சை செய்ய 7 லட்ச ரூபாய் தேவைப்பட்ட நிலையில் அவர்களிடம் போதிய பணம் இல்லாததால், முதல்வர் ஸ்டாலின் ஐயா தான் தனக்கு உதவி செய்ய வேண்டும் என கஜன் தன்னுடைய மழலை குரலில் பேசிய வீடியோ வெளியானது. அந்த சிறுவன் என்னுடைய பெயர் கஜன். எனக்கு ஆபரேஷன் பண்ண அம்மா அப்பா கிட்ட காசு இல்ல.

முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா தான் என்ன காப்பாத்தணும் என கையெடுத்து கும்பிட்டு பேசி இருந்தான். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் உடனடியாக சிறுவனின் குடும்பத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் பண உதவி செய்துள்ளார். அதன் பிறகு அமைச்சர் ராஜகண்ணப்பன் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் கலந்து ஆலோசனை செய்து அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏற்பாடு செய்தார். இதனையடுத்து பரமக்குடி துணை இயக்குனர் பிரதாப் தலைமையில் மருத்துவக் குழு சிறுவனை வீட்டிற்கு சென்று ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் ஆப்ரேஷன் செய்வதற்காக தற்போது சென்னை மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச் சென்றுள்ளனர். உதவி வேண்டும் என கேட்கும் குழந்தைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உடனடியாக உதவி செய்வது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.