
கர்நாடகா மாநிலம் பெங்களூர் கோனனகுண்டே கனகபுரா ரோட்டில் ஆயுத ஆடை தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையின் பின்பகுதியில் உள்ள புதரில் வாலிபர் ஒருவர் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு அந்த இடத்தில் கிடந்த செல்போனையும் காவல்துறையினர் பற்றி துப்பு துலக்கினர்.
அப்போது அந்த வாலிபர் கேரளாவில் சேர்ந்த விஷ்ணு பிரசாத்(37) என்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரது தாயை கண்டுபிடித்து விஷ்ணு பிரசாத்தின் உடலை அடையாளம் காணவும், உடலை பெற்று செல்லும்படியும் கூறினர். ஆனால் தனது மகன் திருடன் என்பதால் அவரது தாய் உடலை பார்க்க வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார். இதையடுத்து காவல்துறையினர் அவரை சமாதானம் செய்து பெங்களூருக்கு அழைத்து வந்தனர். அதன் பிறகு அவரது தாயார் இது எனது மகன் தான் என்று அடையாளம் காட்டினார். ஆனால் அவர் தனது சொந்த ஊருக்கு விஷ்ணுவின் உடலை எடுத்துச் செல்ல மறுத்தார்.
இதனால் காவல்துறையினர் வேறு வழியின்றி தாங்களே இறுதி சடங்கு நடத்தி வைத்தனர். மேலும் விஷ்ணு பிரசாத்தின் பின்னணி பற்றி விசாரித்த போது, அவர் பிரபல ரவுடி என்பதும், அவர் மீது கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 30க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து விஷ்ணு பிரசாத் எப்படி இறந்தார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.