சிட்டி வங்கி இந்தியாவின் வாடிக்கையாளர் வணிகம் முழுவதையும் ஆக்ஸிஸ் வங்கி வாங்கும் நடைமுறையானது விரைவில் முடிந்து விடும் என எதிர்பார்க்கும் நிலையில், சிட்டி வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆக்ஸிஸ் வங்கி வாடிக்கையாளர்களாக மாறிவிடுவார்கள். கடந்த வருடம் மார்ச் மாதம் ஆக்ஸிஸ் வங்கி, சிட்டி வங்கி இந்தியாவின் வாடிக்கையாளர் வணிகம் முழுவதையும் ரூபாய்.12,325 கோடிக்கு கைப்பற்றுவதாக அறிவித்து இருந்தது.

சிட்டி வங்கி வாடிக்கையாளர் வணிகப் பிரிவில் கடன் வழங்குதல், கிரெடிட் கார்டு, சொத்துக்கள் மீதான கடன் உட்பட பல வணிகங்களை மேற்கொண்டு வந்தது. இந்த ஒப்பந்தம் நிறைவு பெற்றது, சிட்டி வங்கியின் கிளைகள் மற்றும் ஏடிஎம்கள் அனைத்தும் ஆக்ஸிஸ் வங்கி என பெயர்மாற்றப்பட்டது. அதே சமயத்தில் சிட்டி வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு எண், கட்டணம், சேவைகள் என எதையும் மாற்றவேண்டிய அவசியமில்லை என கூறப்பட்டுள்ளது.

இவர்களது வங்கி பெயர் மட்டும் மாறுகிறது. முன்பே பயன்படுத்தி வந்த ஏடிஎம், கிரடிட்கார்டு, டெபிட்கார்டு, காசோலை என அனைத்தையும் வழக்கம் போல பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிட்டி வங்கியில் கணக்கு வைத்திருப்போரின் அனைத்து நடைமுறைகளும் அப்படியே இருக்கும் எனவும்  எந்த கெடு தேதியிலும் மாற்றம் இருக்காது எனவும்  தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சிட்டி வங்கியின் வாடிக்கையாளர்களின் ஐஎஃப்எஸ்சி கோடு உள்ளிட்ட விபரங்களும் மாறாது எனவும்  தெரிவிக்கப்பட்டு உள்ளது.