சிங்கப்பூரின் சுற்றுலா துறையானது, வரும் 2024 ஆம் வருடத்திற்குள் கொரோனா தொற்றிற்கு முந்தைய வளர்ச்சி நிலையை அடைந்து விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் உலக நாடுகளில் மூன்று வருடங்களாக மக்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து கொண்டிருக்கிறார்கள். விமானம், ரயில் மற்றும் வாகன போக்குவரத்து முடங்கியதால் பல நாடுகளில் சுற்றுலாத் துறையிலும் பாதிப்பு ஏற்பட்டது. அந்த வகையில், சிங்கப்பூரிலும் கடந்த 2022 ஆம் வருடத்தில் சுற்றுலாத்துறை அதிக வளர்ச்சியை கண்டிருந்தது.

அதன்படி கடந்த வருடத்தில் 40 லட்சத்திலிருந்து 60 லட்சம் வரை சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள் என்று சிங்கப்பூரின் சுற்றுலா வாரியம் கணித்திருந்தது. ஆனால் அவற்றை பொய்யாக்கும் விதமாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. அது குறித்து கடந்த வாரத்தில் சிங்கப்பூர் சுற்றுலா வாரியமானது வெளியிட்டிருந்த அறிக்கையில், கடந்த வருடத்தில் சிங்கப்பூருக்கு மொத்தமாக சுமார் 63 லட்சம் மக்கள் வருகை புரிந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

எனவே, பல பொழுதுபோக்கு வசதிகளை கொண்டிருக்கும் சிங்கப்பூரில் சுற்றுலாத்துறை வரும் 2024 ஆம் வருடத்திற்குள் கொரோனா தொற்றுக்கு முந்தைய வளர்ச்சி அடைந்து விடும் என்று கூறப்பட்டிருக்கிறது