பிரிட்டனைச் சேர்ந்த ‘பேக்பேக்கர் பென்’ (Backpacker Ben) என்ற பயணி இந்திய ரயில்வேயில் பயணம் செய்தபோது, அவர் கண்ட ஒரு செயல் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரயில் பெட்டியைச் சுத்தம் செய்த ஒரு ரயில்வே ஊழியர், அதில் சேகரித்த குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தாமல், ஓடும் ரயிலில் இருந்து அப்படியே தண்டவாளத்தில் வீசும் காட்சியை அவர் வீடியோவாகப் பதிவு செய்து, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ “இந்தியாவில் ரயில்களை எப்படி சுத்தம் செய்கிறார்கள்” என்ற தலைப்பில் வைரலானதையடுத்து, இணையத்தில் பலத்த விமர்சனங்களை எழுப்பியது.

 

View this post on Instagram

 

A post shared by Backpacker Ben (@backpacker.ben)

குப்பைகளைத் தண்டவாளத்தில் வீசுவதைத் தான் படம்பிடிப்பதை அறிந்தும், அந்த ஊழியர் அதைப் பொருட்படுத்தாமல் குப்பைகளை வீசியுள்ளார். இந்தச் செயலைக் கடுமையாக விமர்சித்த நெட்டிசன்கள், இது “தூய்மை இந்தியா” (Swachh Bharat) திட்டத்தைக் கேலி செய்வது போல உள்ளது என்று குற்றம் சாட்டினர்.

மேலும், வெளிநாட்டுப் பயணிகள் முன்பே இப்படிச் செயல்படுவது இந்தியாவின் பிம்பத்தைச் சிதைப்பதாகவும் கருத்து தெரிவித்தனர். இந்த வீடியோ குறித்துப் புகார் எழுந்ததை அடுத்து, ‘RailwaySeva’ என்ற இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவைப் பிரிவினர் வருத்தம் தெரிவித்ததுடன், அது குறித்துத் தகவல்களை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளனர்.