மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள பைஹார் நகரில் (Balaghat district, Baihar), சமனாபூர் சௌக் என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை பகலில் ஒரு திகிலூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குச் சந்தை நடுவில் வைத்து ரிது பண்டார்கர் என்ற இளம் பெண்ணை ஒரு இளைஞன் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.
இந்தக் கொடூரமான தாக்குதல் திடீரென நடந்ததால், அங்கு இருந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். அவர்கள் உதவிக்காகக் கூச்சலிட்டாலும், யாரும் அருகில் சென்று அந்த இளைஞனைத் தடுக்கவோ, பெண்ணைக் காப்பாற்றவோ முயற்சிக்கவில்லை.
சம்பவம் நடந்த சில நொடிகளிலேயே கடைகள் அடைக்கப்பட்டன. மேலும், மக்கள் விலகிச் சென்றனர். ஆனால், மிகவும் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், அங்கிருந்த பலர் தங்கள் செல்போன்களில் இந்தக் கொலையை வீடியோ எடுத்துள்ளனர். இந்தக் கொடூரச் சம்பவத்திற்குக் காரணம் காதல் தகராறாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இறந்த ரிதுவுக்கும், குற்றம் சாட்டப்பட்ட இளைஞனுக்கும் இடையே முன்னரே அறிமுகம் இருந்ததாகவும், கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே மோதல் நிலவி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே இளைஞன் ஆத்திரத்தில் இந்தச் செயலைச் செய்துள்ளான். போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து, மயக்கமடைந்த நிலையில் இருந்த குற்றவாளியைக் கைது செய்துள்ளனர்.
