கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சேர்பு பகுதியைச் சேர்ந்த அஜ்மல் என்பவர் குர்காஞ்சேரி பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார். அங்கு பயிற்சிக்கு வந்த இரண்டு இளம்பெண்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட அவர் ஒருவருக்குத் தெரியாமல் மற்றொருவரிடம் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.
இரு பெண்களிடமும் காதலிப்பதாக ஆசை வார்த்தைகளைக் கூறிய அஜ்மல் அவர்களைத் திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்துள்ளார். இதனை உண்மை என்று நம்பிய அந்தப் பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
தங்கள் இருவரையும் அஜ்மல் ஏமாற்றி வருவதை வெகுநாட்கள் கழித்து அறிந்து கொண்ட அந்த இளம்பெண்கள் இதுகுறித்து சேர்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். திருமண வாக்குறுதி அளித்து தங்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அஜ்மலைக் கைது செய்தனர்.
விசாரணையில் அவர் இதே போன்று உடற்பயிற்சி கூடத்திற்கு வந்த பல பெண்களை ஏமாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் மற்ற பெண்கள் புகார் அளிக்க முன்வராததால் தற்போது இந்த இரண்டு பெண்களின் புகாரின் அடிப்படையில் மட்டும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
