உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது, வாலிபர் ஒருவர் கொழுந்துவிட்டு எரியும் ஹோலி தீக்குள் திடீரென குதித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குன்னூர் தாலுகா நந்த்ரோலி கிராமத்தில் நேற்று இரவு பாரம்பரிய முறைப்படி ஹோலி தீ மூட்டப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர், மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மக்கள் தீயைச் சுற்றி வந்து கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராத விதமாக அந்த வாலிபர் எரியும் தீயின் நடுவே சென்று நின்றார். இதைப் பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

உடனே சுதாரித்துக் கொண்ட சில இளைஞர்கள், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தீக்குள் பாய்ந்து அந்த வாலிபரை இழுத்து வெளியே வந்தனர்.

சிறிது தாமதித்திருந்தால் அந்த வாலிபர் கருகிப் போயிருப்பார். தற்போது இந்தத் திகிலூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “பண்டிகை கொண்டாட்டத்தில் இப்படியா செய்வது?” என நெட்டிசன்கள் அந்த வாலிபரை வறுத்து எடுத்து வருகின்றனர்.