
கர்நாடக மாநிலம் கடக் மாவட்டம், லக்ஷ்மேஷ்வர் நகரில், ஹோலி பண்டிகையின் போது அடையாளம் தெரியாத சில நபர்கள் விஷம் கலந்த நிறங்களை சில பள்ளி மாணவிகளின் மீது வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பேருந்து நிறுத்தத்தில் 8 மாணவிகள் பேருந்துக்காக காத்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள், மாணவிகள் மீது விஷம் கலந்த நிறங்களை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இதனால் அந்த மாணவிகளுக்கு நெஞ்சுவலி மற்றும் மூச்சுத் திணறல் போன்ற உடல் பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக கர்நாடக போலீசார் விசாரணையை துரிதபடுத்தி உள்ளனர். அவர்கள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும், மாணவிகளின் வாக்குமூலங்களை பெற்றும் அந்த மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.