கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை ஸ்டேன்மோர் சந்திப்பு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 60 மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். நேற்று பள்ளிக்கு 45 மாணவ, மாணவிகள் மட்டுமே வருகை தந்தனர். இந்நிலையில் மதிய உணவு சாப்பிட்ட பிறகு 24 மாணவ மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம், தலைவலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களும், செவிலியர்களும் மாணவ, மாணவிகளை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர்.

பின்னர் மாணவ, மாணவிகள் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து நன்றாக இருந்த மாணவர்களை பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மாணவ-மாணவர்களின் குடிதண்ணீர், வாந்தி மாதிரி ஆகியவை பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது. சத்துணவு மற்றும் குடிநீரால் வாந்தி மயக்கம் ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என டாக்டர்கள் பரிசோதித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.