திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து படிப்பாதை, ரோப்கார், மின் இழுவை ரயில் ஆகியவை மூலமாக மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர். ஏற்கனவே வெற்றிவேல், வீரவேல், திருப்புகழ் என்ற பெயர்களில் இயக்கப்படும் மின் இழுவை ரயில்களில் 40 பயணிகள் வரை செல்லலாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின் இழுவை ரயில் நிலையத்திற்கு குளிர்சாதன வசதி, டிவி என நவீன வசதிகளுடன் கூடிய 2 மின் இழுவை ரயில் பெட்டிகள் வாங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 72 பேர் வரை பயணம் செய்ய ஏதுவாக இருக்கும் ரயில் பெட்டிகளை மின் இழுவை ரயில் நிலையத்தில் பொருத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி தற்போது பழனி மின் இழுவை ரயில் நிலையத்தில் நவீன ரயில் பெட்டிகளை பொருத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதற்கட்டமாக ரயில் நிலைய நடைமேடை பகுதியை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து சீரமைக்கும் பணிகள் நிறைவு பெற்றது. நேற்று ரயில் பெட்டிகளை ரயில் நிலைய தண்டவாளத்தில் பொருத்தும் பணி நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறியதாவது, நவீன ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் பொருத்தி இயக்குவதற்கான பணிகளை தொடங்கியுள்ளோம். விரைவில் ஐ.ஐ.டி பொறியாளர்கள் குழுவினர் வந்து பெட்டியை பார்வையிட்டு, இயக்கி சோதனை செய்வார்கள். அந்த சோதனையில் பெட்டிகளில் மாற்றம் செய்வது இருந்தால் அதற்கான பணிகள் நடைபெற்று சோதனை ஓட்டம் நடத்தப்படும். பின்னர் சிறப்பு பூஜையுடன் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என கூறியுள்ளனர்.