சஞ்சு சாம்சனின் சதத்தால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் குவித்தது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி போலண்ட் பார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீசுவதாக முடிவு செய்தது. இந்திய அணியில் துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ரஜத் படிதார் சேர்க்கப்பட்டார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் துவக்க வீரர்களான ரஜத் படிதார் 22 மற்றும் சாய் சுதர்சன் 10 ரன்களிலும் அவுட் ஆகினர். பின் சஞ்சு சாம்சன் மற்றும் கே.எல் ராகுல் இருவரும் கைகோர்த்தனர்.

இதில் ராகுல் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின் சாம்சனுடன் திலக் வர்மா கைகோர்க்க, இருவரும் சிறப்பாக ஆடி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். திலக் வர்மா சிறப்பாக ஆடி அரைசதம் (52 ரன்கள்) கடந்து அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து ரிங்கு சிங் களமிறங்க, சிறப்பாக ஆடி அரைசதமடித்த சஞ்சு சாம்சன் அதை அப்படியே  சதமாக மாற்றினார். சாம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 114 பந்துகளில் (6 பவுண்டரி, 3 சிக்ஸர்) 108 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து வந்த அக்சர் பட்டேல் ஒரு ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 14 ரன்களும், ரிங்கு சிங் அதிரடியாக 27 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 38 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். கடைசியில் அவுட் ஆகாமல் அர்ஷ்தீப் சிங் 7 ரன்களுடனும், ஆவேஷ் கான் 1 ரன்னிலும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக பியூரன் ஹென்ட்ரிக்ஸ் 3 விக்கெட்டுக்களும், பர்கர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். தற்போது தென்னாப்பிரிக்க அணி களமிறங்கி ஆடி வருகிறது..