3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி  தொடரை கைப்பற்றியது டீம் இந்தியா..

3  ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி போட்டியில் தென்னாப்பிரிக்காவை 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டீம் இந்தியா. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்திய அணி. நேற்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் (108; 114 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சர்) ஒருநாள் போட்டியில் தனது முதல் சதம் அடித்தார். திலக் வர்மாவும் (52; 77 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சர்) ஒருநாள் அரங்கில் தனது முதல் அரைசதத்தை அடித்தார்.

பின்னர்  297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 45.5 ஓவரில் 218 ரன்களுக்குஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்க அணியில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த டோனி டி ஜார்ஜி  (81 ரன்கள்) இந்தப் போட்டியிலும் அபார இன்னிங்ஸ் ஆடினார். இந்திய பந்துவீச்சாளர்களில் அர்ஷ்தீப் சிங் 30 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.. மேலும் ஆவேஷ் கான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும், முகேஷ் குமார் மற்றும் அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தென்னாப்பிரிக்க இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர்களான ரிசா ஹென்ட்ரிக்ஸ் (19) மற்றும் டோனி டி ஜார்ஜி ஆகியோர் தென்னாப்பிரிக்காவுக்கு நல்ல தொடக்கத்தை அளித்தனர். ஹென்ட்ரிக்ஸை (19 ரன்கள்) அர்ஷ்தீப் பெவிலியனுக்கு அனுப்பியபோது 59 ரன் தொடக்க பார்ட்னர்ஷிப் முடிந்தது. அடுத்து வந்த ராஸி வாண்டர் டசன் (2) அக்சர் பட்டேலின் பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆனார். மறுபுறம், ஜோர்ஜி தொடர்ந்து பவுண்டரிகள் அடித்து 54 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். 25 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா 135/2 என்ற ஸ்கோருடன் சிறந்த நிலையில் இருந்ததால் மார்க்ரம் (36 ரன்கள்) கிரீஸில் நிலைத்து நின்றார். ஆனால், வாஷிங்டன் சுந்தர் வீசிய அடுத்த ஓவரில் இருந்து தென்னாப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

தொடர்ந்து மார்க்ரம் சுந்தரால் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டார்.. அதன்பின் அர்ஷ்தீப் சிங் எல்பிடபியூ முறையில்  ஜோர்ஜியை (81 ரன்கள்) அவுட் ஆக்கினார். ஆவேஷ் கான் பந்துவீச்சில் கிளாசன் (21) ஆட்டமிழந்தார். சாய் சுதர்ஷன் மிட்-ஆஃபில் ஒரு நல்ல டைவிங் கேட்சை எடுத்து கிளாசெனை வெளியேற்றினார். பின் வியான் முல்டர் (1) வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆபத்தான டேவிட் மில்லர் (10),  மகராஜ் (14), வில்லியம்ஸ் (2) ஆகியோரை அடுத்தடுத்த ஓவர்களில் பெவிலியன் அனுப்பினார் அர்ஷ்தீப் சிங். கடைசியில் ஹென்ட்ரிக்ஸ் (18) அவுட் ஆக தென்னாப்பிரிக்க அணி 45.5 ஓவரில் 218 ரன்களுக்குஆல் அவுட் ஆனது. 

டாஸ் இழந்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை. அறிமுக வீரர் ரஜத் படிதார் (22; 16 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்சர்) அதிரடியாக தொடங்கி பர்கர் பந்தில் ஆட்டமிழந்தார். விரைவில் சாய் சுதர்ஷன் (10) ஹென்ட்ரிக்ஸ் ஓவரில் எல்பிடபிள்யூ மூலம் திருப்பி அனுப்பப்பட்டார். ராகுலுடன் இணைந்த சாம்சன் தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். பின் கே.எல்.ராகுலை (21; 35 பந்துகளில் 2 பவுண்டரி) முல்டர் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார். அடுத்து வந்த திலக் வர்மா தொடக்கத்தில் மிக மெதுவாக விளையாடினார். முதல் 38 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர் திலக் வர்மா ஆக்ரோஷத்தை அதிகப்படுத்தினார். ஏற்கனவே அரை சதத்தை பூர்த்தி செய்திருந்த சஞ்சுவும் சிறப்பாக ஆட , ஸ்கோர் போர்டு எகிற தொடங்கியது.

பின் திலக் வர்மா கேசவ் மகராஜால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். தொடர்ந்து விரைவில் சஞ்சு சாம்சன் தனது சதத்தை பூர்த்தி செய்தார். பின்னர், ரிசாட் வில்லியம்ஸின் பந்துவீச்சில் ரிசா ஹென்ட்ரிக்ஸிடம்  கேட்ச்கொடுத்து அவுட் ஆனார் சாம்சன். அக்சர் படேல் (1), வாஷிங்டன் சுந்தர் (14) ஆகியோரை ஹென்ட்ரிக்ஸ் பெவிலியன் அனுப்பினார். கிரீஸில் இருந்த நேரம் முழுவதும் ஆக்ரோஷமாக விளையாடிய ரிங்கு சிங்கை (38; 27 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சர்) பர்கர் ஆட்டமிழக்கச் செய்தார். இன்னிங்ஸின் கடைசி ஓவரில் ரிங்கு ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸரை விளாசினார். அடுத்த பந்தில் ரிசா ஹென்ட்ரிக்ஸிடம் கேட்ச் ஆனார். அர்ஷ்தீப் சிங் 7 ரன்னுடனும், ஆவேஷ் கான் 1 ரன்னிலும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

தென்னாப்பிரிக்க மண்ணில் 2வது வெற்றி :

தென்னாப்பிரிக்க மண்ணில் இருதரப்பு ஒருநாள் தொடரில் இந்திய அணி பெற்ற 2வது வெற்றி இதுவாகும். முன்னதாக, இந்தியா தென்னாப்பிரிக்காவில் 8 இருதரப்பு ஒருநாள் தொடர்களில் விளையாடியது, அதில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்திய அணி 2018ல் ஒரு தொடரில் வெற்றி பெற்றிருந்தது. இப்போது 9 தொடரில் இரண்டாவது தொடரை வென்றுள்ளது டீம் இந்தியா..