இந்த நூற்றாண்டின் வருந்தத்தக்கக்கூடிய ஒரு நிகழ்வு காசா பகுதியில் நடந்து கொண்டிருக்கிறது.  மனித உரிமை மீறலின் உச்சகட்டம் நடந்து கொண்டிருப்பதாக ”SavetheChildren” என்ற தன்னார்வ அமைப்பு தற்போது கூறியுள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிர்களுக்கு உத்தரவாதம் இன்றி வாழ்ந்து வருவதாகவும்,  மருத்துவ சிகிச்சைகள் சரிவர கிடைக்காததால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மரணம் அடையும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காசா நகரத்தில் 50,000க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் போதிய மருத்துவ உதவிகள் இல்லாமல் தவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இஸ்ரேல் விமானப்படை காசா பகுதிகளில் தாக்குதல் நடத்திவரும் நிலையில்,  குழந்தைகளுடைய பாதுகாப்பு இங்கு கேள்விக்குறியாக இருப்பதாக தன்னார்வ அமைப்பு வேதனையோடு பதிவிட்டுள்ளது. குறிப்பாக காசாவின் இரண்டாவது பெரிய மருத்துவமனையான அல் – குவாத் மீது இஸ்ரேல் உடைய ராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருவதாக பாலஸ்தீன செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது.

வடக்கு காசாவில் உள்ள இந்த  அல்-குவாத் மருத்துவமனையில் இருந்து இதுவரை 400-க்கும் மேற்பட்ட அவசர சிகிச்சை நோயாளிகளும்,  1200 புற நோயாளிகளும் மருத்துவமனையை சுற்றி தங்கி இருந்த 12 ஆயிரம் மக்களும் அந்த பகுதியை விட்டு தற்போதைக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது. நேற்று  மருத்துவமனை வளாகத்தை சுற்றி 20 மீட்டர் அளவுக்கே இஸ்ரேல் உடைய விமானப்படை  தாக்குதல் நடத்தியதாக  கூறப்பட்டுள்ளது, அந்த காட்சிகளையும் தற்போதைய பாலஸ்தீன அரசு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

காசாவில் கடந்த 16 நாட்களில் நடைபெற்ற வான்வெளி தாக்குதலில் 14,000 குழந்தைகளும் பெண்களும் படுகாயம் அடைந்துள்ளதாகவும்,  அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை கொடுப்பதற்கு மருத்துவ உதவிகளோ,  மருத்துவர்கள் உரிய எண்ணிக்கையில் இல்ல. மிகவும் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. கிரிமினாசினிக்கு பதிலாக சமையலுக்கு பயன்படுத்தப்படும் வினிகரை பயன்படுத்துவதாகவும் வேதனையோடு அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்நிலையில்தான் எகிப்து எல்லையான ரஃபா நகரத்தில் இருந்து மூன்றாவது நிவாரண குழு அடங்கிய லாரிகள் உள்ளே காசா உள்ளே நுழைந்திருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. ஏற்கனவே நேற்று 17 லாரிகளும்,  அதற்கு முன்பு 20 லாரிகளும் மொத்தமாக 37 லாரிகள் சென்ற நிலையில் இன்று மேலும் ஒரு குழு சென்றுள்ளது.இந்த நிவாரண பொருட்கள் அனைத்தும் காசா நகரத்தில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு சரியாக போய் சேருகிறதா ? அவர்களுக்கு உதவிகள் செய்யப்படுகிறதா ? என்கின்ற விவரம் சரிவர தெரியவில்லை என்கின்ற தகவல்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.