ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அவரின் இப்பேச்சு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையடுத்து சட்டசபையில் ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “வகுப்புவாத சக்திகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஊதுகுழலாக செயல்படுகிறார். அரசுக்கு எதிரான ஆளுநரின் செயல்பாடுகளை கைத்தட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம்.

ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு என்றார் அண்ணா. அதில் நானும் உடன்படுகிறேன் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். மேலும் 2-வது முறையாக ஆளுநர் நடவடிக்கை மீது தீர்மானம் கொண்டுவரக்கூடிய நிலைக்கு ஆளாகியுள்ளேன். தமிழ்நாடு அரசுக்கும் மக்களுக்கும் நண்பராக இருக்க ஆளுநர் தயாராக இல்லை. தமிழ்நாடு அரசுக்கு எதிராக பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்” என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.