தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ஆளுநர் தொடர்பாக எதுவும் விவாதிக்க கூடாது என்பதற்கான தீர்மானத்தை தளர்த்தி தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு 144 பேர் சம்மதம் தெரிவித்தனர். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது, ஆளுநர் ரவி ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றி வருகிறார். நாள்தோறும் ஒரு கூட்டம், நாள்தோறும் ஒரு விமர்சனம், வகுப்புவாத எண்ணம் என சிலரின் ஊதுகுழலாக செயல்படுகிறார்.

நான் ஆளுநருக்கு அரசியல் சட்டம் தெரியவில்லை என கூற மாட்டேன். ஆனால் அவரின் அரசியல் விசுவாசம் அரசியல் சட்ட விசுவாசத்தை விழுங்கிவிட்டது. இதன் காரணமாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி அமைச்சரவையின் கொள்கைகளை ஆளுநர் பொதுவெளியில் பேசி வருகிறார். மேலும் தமிழ்நாடு அரசுக்கும் தமிழக மக்களுக்கும் நண்பராக இருப்பதற்கு தயாராக இல்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக ஆளுநரின் செயல்கள் பதவி ஏற்ற நாளிலிருந்து இருக்கிறது என்று கூறினார்.