இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் சந்தீபா விர்க் 40 கோடி அளவில் பணம் மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இவருக்கு இன்ஸ்டாகிராமில் 12 லட்சம் பின் தொடர்பாளர்கள் உள்ளனர். குற்றச்சாட்டின் படி மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் மொகாலியில் உள்ள காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தீபா மோசடி வழியில் அசையா சொத்துக்களை வாங்கியதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை அமலாக்கத்துறை டெல்லி மற்றும் மும்பையில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பண மோசடி வழக்கு தொடர்பாக சோதனை செய்தது. அப்போது இவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. எப்டிஏ அங்கீகாரம் பெற்ற அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்வதாக கூறும் hyboocare.com இணையதளம் தனக்கு சொந்தமானது எனக் கூறிக்கொண்டு வந்துள்ளார். இருப்பினும் அதில் பொருட்கள் எதுவும் தயாரிப்பில் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இணையதளம் பயனாளர்களுக்கு முறைப்பாடு உள்ளதாகவும் பணம் செலுத்தும் கேட்வே அடிக்கடி பிரச்சனையை மேற்கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் தொடர்பு எண் செயல்பாட்டில் இல்லை, நிறுவனம் குறித்து வெளிப்படைத்தன்மையான விவரங்கள் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. நிதி மோசடி செய்வதற்காக உண்மை இல்லாத வணிக செயல்பாட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. இதேபோன்று செயல்படாத ரிலையன்ஸ் கேப்பிட்டல் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் டைரக்டர் அங்காரை நடராஜன் சேதுராமன் உடன் தொடர்புகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
