உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோவின் ரிங் ரோடு பகுதியில் உள்ள தனது அலுவலகத்திற்குள் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஷாபாஸ் என்பவர் 12-போர் துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட பரிதாபமான சம்பவம் கடந்த புதன்கிழமை பிற்பகல் நிகழ்ந்தது.

தற்கொலை செய்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே ஷாபாஸ் பேஸ்புக்கில் லைவாக பகிர்ந்த வீடியோவில், ரூ.15 கோடி கடன் சுமையால் கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும், ஒரு வணிக கூட்டாளி தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும் உணர்ச்சிவசமாக வெளிப்படுத்தியிருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது.

காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது, பிற்பகல் 3:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஷாபாஸ் தற்கொலைக்கு முன்பு தனது அலுவலக காவலரை குளிர்பானம் வாங்க அனுப்பியதாக கூறப்படுகிறது. காவலர் வெளியே சென்றவுடன், அலுவலகத்தில் இருந்த துப்பாக்கியை எடுத்து, தனது தலையில் சுட்டுக்கொண்டார்.

சத்தம் கேட்டவுடன் அலுவலகத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்த போது, அவர் ரத்தக்குளத்தில் கிடந்ததை உறுதிப்படுத்தினர். சம்பவத்துக்குப் பிறகு கிழக்கு ஏடிசிபி, ஏசிபி, மற்றும் தடயவியல் குழுவினர் நேரில் வந்தனர். உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த தற்கொலைக்கு வழிவகுத்த சூழ்நிலைகளை ஆராய, ஷாபாஸ் பயன்படுத்திய மொபைல், பேஸ்புக் லைவ் வீடியோ, மற்றும் அலுவலகத்தில் இருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவரின் கடன்கள் மற்றும் ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்கள் தற்போது போலீசாரால் ஆய்வு செய்யப்படுகின்றன.

மேலும் ஷாபாஸ் வீடியோவில் குற்றம் சாட்டிய வணிக கூட்டாளியை விசாரிக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த சோகமான சம்பவம் தொழில் உலகத்திலும், சமூகத்திலும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.