மோடி அரசின் “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்” நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதையடுத்து அனைத்து கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அரசின் இம்முடிவால் இனிமேல் எந்த பயனர்களுக்கும் குறைவான ரேஷன் கிடைக்காது.

உண்மையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உரிய அளவு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதிசெய்வதற்காக ரேஷன் கடைகளில் மின்னணு தராசுகளுடன் மின்னணு விற்பனை சாதனங்களை இணைக்கும் அடிப்படையில் உணவு பாதுகாப்பு சட்ட விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. அதன்பின் அனைத்து டீலர்களும் மின்னணு தராசு வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

அதோடு இனிமேல் எந்த ஒதுக்கீட்டையும் திருடக்கூடாது என்பதற்காக அரசும் இதற்குரிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அரசின் இந்த உத்தரவுக்கு பின், இப்போது நாட்டிலுள்ள அனைத்து ரேஷன் கடைகளும் ஆன்லைன் மின்னணு விற்பனை மையத்துடன் அதாவது, பிஓஎஸ் கருவிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இனிமேல் ரேஷன் எடையில் குளறுபடியும் நடக்க வாய்ப்பு இருக்காது. ரேஷன் டீலர்களுக்கு ஹைபிரிட் மாடல் பாயின்ட் ஆப் சேல் மிஷின்களை அரசு வழங்கி இருப்பதால் பொது விநியோக திட்டத்தின் பயனாளிகள் எந்த சூழ்நிலையிலும் குறைவான ரேஷன் பெறக்கூடாது. நெட்வொர்க் இல்லையெனில் இந்த இயந்திரங்கள் ஆஃப்லைனிலும் ஆன்லைன் பயன்முறையிலும் வேலை செய்யும் என கூறப்படுகிறது.