தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரசாமிபேட்டையில் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் மாரியம்மன், செல்லியம்மன் கோவில்கள் அமைந்துள்ளது. இந்த கோவில்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் நேதாஜி நகர் பைபாஸ் சாலையில் இருக்கிறது. இங்கு ஏராளமானோர் கடை அமைத்து கோவிலுக்கு வாடகை செலுத்தி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் 4000 சதுர அடி இடத்தை வாங்கி கடைகள் கட்டி, பல ஆண்டுகளாக நிலத்திற்கான வாடகை கொடுக்காமல் இருந்துள்ளார்.
இதுவரை அவர் 32 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளார். அதனை செலுத்துமாறு பலமுறை அறிவுறுத்தியும் அவர் கண்டு கொள்ளவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில், அந்த நிலத்தில் இருக்கும் கடைகளை அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் உதயகுமார் தலைமையில் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று குறிப்பிட்ட நேரத்தில் இருந்த கடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.