இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வருடம் மே மாதம் முதல் 6 முறை ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. தற்போது ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக இருக்கிறது. சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின் போது ரெப்போ வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. தற்போது பணவீக்கம் குறைந்து வருவதால் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில் பன்னாட்டு தரகு நிறுவனமான எச்எஸ்பிஸியின் பொருளாதார வல்லுநர்கள் 2024-ம் ஆண்டில் மார்ச் மாதம் முடியும் காலாண்டில் 0.25 சதவீதவரையில் ரெப்போ வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளனர். இதேபோன்று உள்நாட்டு தரகு நிறுவனமான கோடக் இன்ஸ்டிடியூஷனல் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2023-24 ஆம் ஆண்டில் பணவீக்கம் 5 சதவீதத்திற்கும் மேலிருக்கும் என்பதால் நீண்ட காலத்திற்கு வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று தெரிவித்துள்ளது. மேலும் ரிசர்வ் வங்கியில் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் வாடிக்கையாளர்கள் வங்கிகளில் கடன்களுக்கான வட்டி விகிதமும் குறையும்.