
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் சமூக ஊடகங்கள் மூலம் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் அவ்வபோது வெளிச்சத்திற்கு வந்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இது போன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடும் கயவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கவும் அது தொடர்பான குற்ற வழக்குகளை விரைவாக முடிக்கவும் கடந்த மாதம் 29ஆம் தேதி தமிழக அரசின் உள்துறை அமைச்சர் செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் உயர் அதிகாரிகள் மற்றும் தடய அறிவியல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உள்துறை செயலாளர் அனைத்து துறை அதிகாரிகளையும் கேட்டுக் கொண்டார். அதில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஈடுபட்ட 4470 பேர் மீது போக்சோ வழக்கு பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு 6920 ஆக உயர்ந்தது. தற்போது நடைபெறும் பாலியல் குற்றங்களை பார்த்தால் இந்த ஆண்டு அதையும் கடந்து விடுமா..? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக அரசு பாலியல் குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்கி இருக்கும் நிலையில் அது யாரையும் பயமுறுத்தியதாக தெரியவில்லை. ஆகவே பாலியல் குற்றவாளிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து உடனடியாக தண்டனை வாங்கி கொடுத்தால் மட்டுமே இது போன்ற குற்றங்கள் குறையும் என்பது பெண்கள் நல அமைப்புகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.