IRCTC சார்பாக 12 நாட்கள் புண்ணிய தீர்த்த யாத்திரை சிறப்பு ரயில் சுற்றுலா தொகுப்பானது அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுபற்றி IRCTC நிர்வாக இயக்குநர் கே.ரவிக்குமார் மற்றும் துணை பொது மேலாளர் (சுற்றுலா) எல்.சுப்பிரமணி போன்றோர் திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது “ஐஆர்சிடிசி சார்பில் சுற்றுலாப் பயணிகளுக்கான பிரத்யேக பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் 4 குளிர்சாதனப் பெட்டிகள், 7 படுக்கை வசதிகொண்ட பெட்டிகள் இருக்கிறது.

அதோடு 752 பேர் இந்த ரயிலில் பயணிக்க முடியும். இந்த ரயிலின் முதல் ஓட்டத்தில் தென்மண்டலம் சார்பாக புண்ணிய தீர்த்த யாத்திரை மேற்கொள்ளப்படவுள்ளது. இச்சேவை மே 4ஆம் தேதி துவங்கி 12 நாட்கள் மேற்கொள்ளப்படும். இந்த சிறப்பு யாத்திரையில் பூரி, கோனார்க், கொல்கத்தா, கயா, வாரணாசி, அயோத்தி மற்றும் அலகாபாத் போன்ற இடங்களை பார்வையிடலாம். மேலும் இந்த யாத்திரையின் போது பயணிகள் தங்கும் வசதி, உள்ளூர் போக்குவரத்து, உணவு, மருத்துவ வசதி, பாதுகாவலர் வசதி, சுற்றுலா வழிகாட்டி வசதி போன்றவை வழங்கப்படும்.

இதற்குரிய கட்டணமாக ஒரு நபரின் ஏசி பயணத்துக்கு 35 ஆயிரத்து 651 ரூபாயும், ஏசி அல்லாத பயணத்துக்கு 20 ஆயிரத்து 367 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இந்த யாத்திரையில் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் www.irctctourism.com என்ற இணையதளத்திலோ, சென்னை, மதுரை, திருச்சி, கோவையில் உள்ள பிரதான ரயில் நிலையங்களிலோ முன்பதிவு செய்துகொள்ளலாம்” என தெரிவித்துள்ளனர்.