
கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து நேற்றிரவு தனியார் பேருந்து ஒன்று கோவை நோக்கி புறப்பட்டது. பேருந்தை ஓட்டுநர் ராபர்ட் ஓட்டிய நிலையில் 36 பயணிகள் பேருந்தில் பயணித்தனர். நேற்றிரவு கிளம்பிய பேருந்து இன்று அதிகாலை 5 மணியளவில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர் மின் பகிர்மான அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் ஓட்டுநர் அதிர்ச்சியடைந்தார்.
அவர் பிரேக் பிடிக்க முயன்ற போது பேருந்து நிற்காமல் சாலையின் ஓரத்திலிருந்த மின் கம்பத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், பேருந்தில் பயணித்த 36 பயணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மின் கம்பத்தில் பேருந்து மோதியதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் மின்வாரிய ஊழியர்கள் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் 3 மணி நேரமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பேருந்தில் பயணித்த பயணிகளை மாற்று பேருந்து மூலம் அவர்களது சொந்த ஊருக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்த நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.