இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்திருக்கிறார்.

இலங்கை அதிபரான ரணில் விக்ரமசிங்கே பல வருடங்களாக நீடித்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க முயற்சிகள் மேற்கொண்டு இருக்கிறார். சிலோன் ஜாமியத்துல் உலமாவின் நூறாவது நினைவு தின கொண்டாட்டம் நடைபெற்ற போது, அதில் அதிபர் பேசியதாவது, 75 ஆவது சுதந்திர தினத்தில் அடியெடுத்து வைக்க இருக்கிறோம்.

நல்லிணக்கம் மற்றும் ஒன்றிணைந்து வாழக்கூடிய காலகட்டம் இது என கருதுகிறேன். இதற்காக தமிழர்கள் மற்றும் இலங்கை தமிழர்களுடன் பேச்சு வார்த்தையை தொடங்கி விட்டோம். இலங்கை தமிழ் மக்களோடு கலந்துரையாடி, அவர்களின் பிரச்சனைகளை அறிந்து அதற்குரிய தீர்வை கண்டறியும் நடவடிக்கைகளை அரசாங்கம் தொடங்கி இருக்கிறது.

இதேபோன்று, இஸ்லாமிய மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றியும் அவர்களுடன் பேச வேண்டும் என்று கூறியிருக்கிறார். இது மட்டுமல்லாமல் சிங்கள சமூகத்தினரிடமும் கட்டாயமாக பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும். சிங்கள சமூகங்கள் சில சாதி பாகுபாட்டால் பாதிப்படைந்திருக்கின்றன.

சமூகம் அவர்களை ஏற்காததால், சமூகநீதி ஆணையத்தை நிறுவுவதற்கு விரும்புகிறேன். இது நெடுங்கால பிரச்சனைக்கு தீர்வாக அமையும். 75 ஆம் வருட சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ள சமயத்தில் ஒரே நாடாக பலமாக இருக்க வேண்டும். சமூகநீதி வெல்லும். இன நல்லிணக்கம் நிலவ வேண்டும். புதிய பொருளாதாரத்தை ஏற்படுத்துவோம். அது, நம்மை செழிப்பாக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.